பந்துவீச்சில் மிரட்டுவாரா பும்ரா..? இன்று நடக்கிறது இந்தியா- அயர்லாந்து மோதும் முதலாவது டி20 போட்டி


பந்துவீச்சில் மிரட்டுவாரா பும்ரா..? இன்று நடக்கிறது இந்தியா- அயர்லாந்து மோதும் முதலாவது டி20 போட்டி
x

இந்தியா- அயர்லாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் இன்று நடக்கிறது.

டப்ளின்,

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- அயர்லாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2-ம் தர அணியே அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து 11 மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ராவுக்கு அயர்லாந்து தொடர் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குதிரும்பும் அவரது பந்து வீச்சு எப்படி உள்ளது? முழு உடல்தகுதியுடன் இருக்கிறாரா என்பதை பரிசோதிக்கும் தொடராக இது அமையும். விரைவில் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டி வர உள்ள நிலையில் பும்ரா தனது பந்து வீச்சில் முழுவீரியத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிங்கு சிங்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசிய ரிங்கு சிங், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைப்பார்கள் என்று தெரிகிறது. ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகிய இளம் சூரர்கள் தங்களது பேட்டிங்கை மேலும் வலுப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும்.

தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, முகேஷ்குமார், அர்ஷ்தீப்சிங், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் என்று பந்து வீச்சு இந்தியாவுக்கு வலுவாக தென்படுகிறது.

அயர்லாந்து எப்படி?

அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங் தலைமையில் களம் காணுகிறது. அயர்லாந்து வீரர்கள் எப்போதும் குறுகிய வடிவிலான போட்டிகளில் நன்றாக ஆடக்கூடியவர்கள். பேட்டிங்கில் கேப்டன் பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல், பந்து வீச்சில் கிரேக் யங், ஜோஷ் லிட்டில், மார்க் அடைர் நல்ல நிலையில் உள்ளனர். உள்ளூர் சூழல் அவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். அதனால் இந்தியாவுக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

போட்டி நடக்கும் மைதானம் 11,500 ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. முதல் இரு ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 5 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது. என்றாலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 225 ரன்கள் குவித்ததும், பதிலடியாக அயர்லாந்து 221 ரன்கள் வரை எடுத்து நெருங்கி வந்து தோற்றதும் நினைவு கூரத்தக்கது.


இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் அல்லது முகேஷ்குமார்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆன்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் ஹேம்ப்பெர், பியான் ஹேன்ட், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, ஜோஷ் லிட்டில், பென் ஒயிட்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம். எஞ்சிய இரு ஆட்டங்கள் ஆக.20, 23-ந் தேதிகளில் இதே மைதானத்தில் நடக்கிறது.

மழை அச்சுறுத்தல்

அயர்லாந்தின் டப்ளின் நகரில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.


இந்திய கேப்டன் பும்ரா மகிழ்ச்சி

''நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு நாட்கள் கிரிக்கெட்டை விட்டு நான் ஒதுங்கி இருந்ததில்லை. இப்போது உடல் அளவில் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இதை அனுபவித்து செய்ய விரும்புகிறேன். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சியின் போது, உலகக் கோப்பை போட்டியை மனதில் வைத்தே தயாராகி வந்தேன். 10, 12 ஏன் 15 ஓவர்கள் கூட இப்போது பந்து வீசுகிறேன்.'' என்று பும்ரா கூறினார்.



Next Story