டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி


டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றி
x
தினத்தந்தி 22 May 2024 1:26 AM GMT (Updated: 22 May 2024 6:06 AM GMT)

டி20 கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றிபெற்றது.

வாஷிங்டன்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்க உள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் போட்டிகள் நடைபெற உள்ளன.

முன்னதாக, வங்காளதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, அமெரிக்கா - வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தவூகித் ஹிர்டோய் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் டெய்லர், கேப்டன் மொனக் பட்டேல் களமிறங்கினர். மொனக் 12 ரன்னிலும், டெய்லர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 14.5 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அமெரிக்கா தடுமாறியது. அடுத்த விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோரி ஆண்டர்சன் மற்றும் ஹர்மீத் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் அமெரிக்கா 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றிபெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேசத்தை முதல் முறையாக வீழ்த்தி அமெரிக்கா வரலாற்று வெற்றிபெற்றது. இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன் 25 பந்துகளில் 34 ரன்களும், ஹர்மீத் சிங் 13 பந்துகளில் 33 ரன்களும் குவித்து அமெரிக்காவின் வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.


Next Story