உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி


உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பு மிகவும் குறைவு - வில்லியம்சன் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2023 8:09 AM IST (Updated: 12 Aug 2023 12:32 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான் என வில்லியம்சன் கூறியுள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மார்ச் 31-ந்தேதி ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் எல்லைக்கோடு அருகே பந்தை துள்ளி குதித்து தடுத்தபோது கீழே விழுந்ததில் வலது முழங்காலில் காயமடைந்தார்.

காயத்தன்மை தீவிரமாக இருந்ததால் உடனடியாக தாயகம் திரும்பிய அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அவர் மீண்டும் பயிற்சியையும் தொடங்கி விட்டார். ஆனாலும் அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கும் உலகக் கோப்பை போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

இது குறித்து வில்லியம்சன் நேற்று அளித்த பேட்டியில்,

'உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. உடல்தகுதியை எட்டுவதற்காக பிசியோ, பயிற்சி உதவியாளர்கள் வகுத்துள்ள திட்டத்தை பின்பற்றி பயிற்சி மேற்கொள்கிறேன்.

தற்போதைய சூழலில் நான் உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான். காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு உலகக் கோப்பை அணிக்கு திரும்புவது என்பது உண்மையிலே கடினமான இலக்கு. என்றாலும் உலகக் கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது. தொடர்ந்து முன்னேற்றத்தை காண விரும்புகிறேன்' என்றார்.

33 வயதான வில்லியம்சன் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். அந்த உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதையும் (10 ஆட்டத்தில் 578 ரன்) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story