'தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் விராட் கோலி சுயநலமாகவே இருக்கிறார்'- வெங்கடேஷ் பிரசாத்


தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் விராட் கோலி சுயநலமாகவே இருக்கிறார்- வெங்கடேஷ் பிரசாத்
x
தினத்தந்தி 6 Nov 2023 10:40 AM GMT (Updated: 6 Nov 2023 10:44 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது.

இதில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பொதுவாகவே பேட்ஸ்மேன்கள் 80 ரன்களை கடந்து விட்டால் சற்று மெதுவாக விளையாடி சதத்தை தொடுவது வழக்கமாகும். அதை பின்பற்றி வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்த அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியிலும் 101 ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை சமன் செய்தார். அதற்காக விராட் கோலி மிகவும் சுயநலமாக விளையாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் விராட் கோலி சுயநலமாகவே இருக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;- "விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக பேசப்படும் விவாதங்களை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆம் விராட் கோலி சுயநலவாதியே. ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது. இவ்வளவு சாதித்த பின்பும் புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்ற சுயநலம் இருக்கிறது. தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் சுயநலமாக இருக்கிறார். ஆம் விராட் கோலி சுயநலவாதியே" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story