இலங்கைக்கு எதிராக 9-வது சதம் அடித்து விராட் கோலி புதிய சாதனை
இலங்கைக்கு எதிராக 9-வது சதம் அடித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
கவுகாத்தியில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 113 ரன்கள் விளாசி சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
* 34 வயதான இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 45-வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் (49 சதம்) சாதனையை நெருங்குகிறார்.
* ஒரு நாள் போட்டியில் உள்நாட்டில் அதிக சதங்கள் அடித்தவரான தெண்டுல்கரின் (20 சதம்) சாதனையை சமன் செய்திருக்கிறார். கோலியும் இந்திய மண்ணில் 20 சதங்கள் ருசித்துள்ளார். இதற்கு அடுத்து அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்காவின் அம்லா, ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் ஆகியோர் தங்களது நாட்டில் தலா 14 சதங்கள் எடுத்துள்ளனர்.
* ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) கோலியின் 73-வது சதமாக அமைந்தது. இந்த வரிசையில் சச்சின் தெண்டுல்கர் (100 சதம்) முதலிடத்திலும், விராட் கோலி 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (71 சதம்) 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதற்கு எல்லாம் மேலாக கோலி இன்னொரு மகத்தான சிறப்பையும் தன்னகத்தே இணைத்துக் கொண்டார். இலங்கைக்கு எதிராக அவரது 9-வது சதம் இதுவாகும். ஒரு நாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் நொறுக்கியவர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் (8 சதம்) இருந்து தட்டிப்பறித்தார். இலங்கைக்கு எதிராக கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் 52 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சரித்திர நாயகனாக உருவெடுப்பார்.
* கவுகாத்தி மைதானத்தில் இதற்கு முன்பு ஒரு நாள் போட்டி ஒன்று மட்டுமே நடந்துள்ளது. 2018-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் கோலி 140 ரன்கள் அடித்திருந்தார். இப்போது இங்கு மறுபடியும் சதம் கண்டுள்ளார்.
* 2022-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியை சதத்தோடு (வங்காளதேசத்துக்கு எதிராக) நிறைவு செய்த விராட் கோலி 2023-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியை சதத்தோடு தொடங்கி இருக்கிறார்.