'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நாங்களும் அங்கம் வகிக்க விரும்புகிறோம்' - ஸ்மிர்தி மந்தனா


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நாங்களும் அங்கம் வகிக்க விரும்புகிறோம் - ஸ்மிர்தி மந்தனா
x

பெண்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உருவாக்குவது கிரிக்கெட் வாரியங்களின் முடிவை பொறுத்தது என்று ஸ்மிர்தி மந்தனா தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஆண்களுக்கு நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை போன்று பெண்களுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்த வேண்டும் என்று இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நாங்களும் அங்கம் வகிக்க விரும்புகிறோம்.

ஆனால் பெண்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துவது கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் ஐ.சி.சியின் கையில் தான் உள்ளது. நிறைய ஆண்கள் டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்துள்ளேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நாமும் இருப்பது உண்மையிலேயே உற்சாகமாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது மாதிரி, பெண்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உருவாக்குவது கிரிக்கெட் வாரியங்களின் முடிவை பொறுத்தது' என்றார்.

இங்கிலாந்து வீராங்கனை டாமி பீமோன்ட் கூறுகையில், 'தற்போது 3-4 நாடுகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஆடுகின்றன. பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து போன்ற நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் எந்த டெஸ்டிலும் ஆடவில்லை. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு இது சரியான நேரமாக இருக்காது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு ஐ.சி.சி. மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அனேகமாக அதை செய்ய அவர்களிடத்தில் ஆர்வம் இருக்காது என்று நினைக்கிறேன்' என்றார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மும்பையில் நாளை தொடங்க உள்ள நிலையில் மந்தனாவும், பீமோன்டும் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story