ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் எங்களால் வெற்றி பெற முடியும்..!! இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை
எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டன்,
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இங்கிலாந்து 325 ரன்களும் எடுத்தன. 91 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை எந்த அணியும் 350-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்ததில்லை.
அந்த வகையில் கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (29 ரன்), பென் டக்கெட் (50 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 257 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள் 'பவுன்சர்' பந்துகளை அதிகமாக வீசி இடைவிடாது குடைச்சல் கொடுத்தனர். ஸ்கோர் 177 ஆக உயர்ந்த போது டக்கெட் 83 ரன்களில் (112 பந்து, 9 பவுண்டரி) ஹேசில்வுட்டின் 'ஷாட்பிட்ச்' பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (10 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் வீழ்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து ஸ்டூவர்ட் பிராட் இறங்கினார்.
பென் ஸ்டோக்ஸ் மிரட்டல்
ஆஸ்திரேலியர்களின் நடவடிக்கையால் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ் தனது பேட்டால் பதிலடி கொடுத்தார். கேமரூன் கிரீனின் ஒரே ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விரட்டி தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஒரு பந்து எல்லைக்கோட்டில் மிட்செல் ஸ்டார்க்கின் கையில்பட்டு சிக்சராக மாறியது. கண்டம் தப்பிய ஸ்டோக்ஸ் தொடர்ந்து ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தினார். முடிந்த வரை ஸ்டூவர்ட் பிராட்டை பந்தை சந்திக்காமல் பார்த்துக் கொண்டார். ஸ்டோக்ஸ் 114 ரன்னில் இருந்த போது சுமித்தும் கேட்ச் வாய்ப்பை வீணடித்தார்.
இதைத் தொடர்ந்து ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஓவர்களில் சிக்சர்களை தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ஸ்டோக்ஸ் 150 ரன்களை கடந்தார். அவர் விளையாடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள். பிரதான சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் காயத்தால் பந்து வீச முடியாமல் போனது ஆஸ்திரேலியாவுக்கு இன்னொரு பின்னடைவாக இருந்தது.
ஆஸ்திரேலிய பவுலர்களை மிரள வைத்த பென் ஸ்டோக்சின் (155 ரன், 214 பந்து, 9 பவுண்டரி, 9 சிக்சர்) போராட்டத்துக்கு ஒரு வழியாக ஹேசில்வுட் 'செக்' வைத்தார். அவர் வீசிய பந்தை விரட்ட முயற்சித்த போது அது பேட்டின் விளிம்பில் பட்டு எழும்பியது. அதை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச் செய்தார். அதன் பிறகே ஆஸ்திரேலியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்போது இங்கிலாந்தின் வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது.
ஆஸ்திரேலியா வெற்றி
ஸ்டோக்ஸ் வீழ்ந்ததும் இங்கிலாந்தின் நம்பிக்கையும் தகர்ந்து போனது. அடுத்து வந்த ஆலி ராபின்சன் (1 ரன்), ஸ்டூவர்ட் பிராட் (11ரன்), ஜோஷ் டங்கு (19 ரன்) வரிசையாக வெளியேறினர். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 81.3 ஓவர்களில் 327 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. பார்மிங்காமில் நடந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.
பேர்ஸ்டோ அவுட்டில் சர்ச்சை
இரண்டாவது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானிபேர்ஸ்டோ (10 ரன்) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை அடிக்காமல் குனிந்து தவிர்த்தார். பிறகு எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக உடனடியாக கிரீசை விட்டு வெளியேறினார். அதற்குள் பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பு மீது சரியாக எறிந்து அப்பீல் செய்தார். டி.வி. ரீப்ளேயை ஆராய்ந்த 3-வது நடுவர் எராஸ்மஸ் இதை ஸ்டம்பிங் என்று அறிவித்தார்.
இதனால் மிகுந்த அதிருப்தியுடன் பேர்ஸ்டோ நடையை கட்டினர். ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் 'இது பழைய ஆஸ்திரேலியா தான். எப்போதும் மோசடி... மோசடி...' என்று கோஷமிட்டனர். மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர். தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.
'அவுட் சரியானது தான்' - ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்.
'விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி முந்தைய சில பந்துகளை பிடித்து விட்டு எங்களது கைக்கு வீசாமல் நேராக ஸ்டம்பு மீது தான் எறிந்தார். பேர்ஸ்டோவின் அவுட் நியாயமானது. விதிப்படி இது சரிதான். சிலர் வேண்டுமென்றால் இதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். முந்தைய நாள் செய்யப்பட்ட ஒரு கேட்ச் போன்று தான் இதையும் நான் பார்க்கிறேன்'.
'எஞ்சிய போட்டிகளில் நாங்கள் வெல்வோம்' - இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்
'இதே போன்ற சூழலில் 2019-ம் ஆண்டு ஹெட்டிங்லேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரா டெஸ்டில் அணிக்கு வெற்றி தேடித்தந்தேன். துரதிர்ஷ்டவசமாக இங்கு அது மாதிரி நடக்கவில்லை. இப்போது நாங்கள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறோம். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்டில் வெற்றி பெற்றோம். நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்றோம். அதே போல் இந்த தொடரில் எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.