'ஒரே நாள் இரவில் நாங்கள் மோசமான அணியாகிவிடவில்லை'- நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்


ஒரே நாள் இரவில் நாங்கள் மோசமான அணியாகிவிடவில்லை- நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்
x

image courtesy; AFP

தினத்தந்தி 2 Nov 2023 8:55 AM IST (Updated: 2 Nov 2023 9:22 AM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது.

புனே,

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 357 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 2, வில் யங் 33,டேரில் மிட்சேல் 24, கேப்டன் டாம் லாதம் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். கடைசியில் கிளன் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுத்து போராடியும் 35.3 ஓவரிலேயே நியூசிலாந்தை 167 ரன்களுக்கு சுருட்டி வென்ற தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4, மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம் 3வது தோல்வியை பதிவு செய்த நியூசிலாந்து 4வது இடத்துக்கு சரிந்து எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை 330 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியது தங்களுடைய தோல்விக்கு காரணம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் ஒரே நாள் இரவில் தங்களுடைய அணி மோசமாகிவிடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. "எங்களுடைய சிறந்த செயல்பாடு இது இல்லை. டி காக் – வாண்டர் டுசென் பார்ட்னர்ஷிப்பிற்கு பின் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். இது மிகப்பெரிய இலக்கு. அதை துரத்திய நாங்கள் சில பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். அவர்கள் ஆரம்பத்திலேயே நல்ல நிலையை எட்டிய நிலையில் எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் நாங்கள் சில காயங்களையும் சந்தித்தோம். இருப்பினும் இதிலிருந்து விரைவாக வெளிவந்து பெங்களூருவில் நடைபெறும் அடுத்த போட்டியில் விளையாட தயாராகிறோம். இப்போதும் நாங்கள் ஒரே நாள் இரவில் மோசமாக அணியாகிவிடவில்லை" என்று கூறினார்.


Next Story