உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் என்ன? - இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய கருத்து


உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் என்ன? - இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய கருத்து
x

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு பின் பேசிய ரோகித் சர்மா, போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. நாங்கள் எங்கள் சிறப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தவில்லை. நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம். ஆனால், எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கேஎல் ராகுலும், விராட் கோலியும் நல்ல கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ரன்கள் அடிப்போம் என எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். நீங்கள் 240 ரன்கள் எடுத்திருக்கும்போது எதிர் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால், மிகப்பெரிய கூட்டணி அமைத்து எங்களை போட்டியில் இருந்து வெளியேற்றிய டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷெனுக்கு வாழ்த்துக்கள்.

எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் முயற்சித்தோம். ஆனால், இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் ஆட ஆடுகளம் சற்று நன்றாக இருந்ததாக நான் நினைக்கிறேன். ஆனால், அதை தோல்விக்கான காரணமாக கூற விரும்பவில்லை. இரண்டாவது இன்னிங்சில் இரவு நேரத்தில் பேட்டிங் ஆடுவது சற்று நன்றாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் போதிய அளவு ரன் அடிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களால் முதலில் நாங்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். கூடுதலாக ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் நாங்கள் போட்டியை எங்கள் பக்கம் திருப்பி இருப்போம். டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷென் இணைந்து சிறப்பான கூட்டணி அமைத்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்' என்றார்.


Next Story