"ஜிம்பாப்வே அணியை எளிதாக கருதமாட்டோம்" - இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டி


ஜிம்பாப்வே அணியை எளிதாக கருதமாட்டோம் - இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டி
x

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி வருவதாக அஸ்வின் தெரிவித்தார்.

சிட்னி,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

குரூப் 1ஐ பொறுத்தவரையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் அடியெடுத்துவைத்துள்ளது. குரூப் 2ஐ பொறுத்தவரையில் ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடித்தாலும், புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன.

மறுபுறம் அரையிறுதிக்கு முன்னேற இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எளிதாக கருதமாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அஸ்வின், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி வருவதாக குறிப்பிட்டார்.

ஜிம்பாப்வே உள்ளிட்ட எந்த அணியையும் புறந்தள்ளிவிட முடியாது என்று தெரிவித்த அஸ்வின், நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்படும் எனவும், இக்கட்டான நிலைக்கு செல்லாது எனவும் கூறினார்.


Next Story