எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் உற்சாகம்


எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் உற்சாகம்
x

image courtesy: ANI

எங்களுக்கே உரிய மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் பட்சத்தில், எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்று நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.

தர்மசாலா,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 5-வது முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள நெதர்லாந்து அணி உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தத்தில் 23 ஆட்டங்களில் விளையாடி அதில் பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.

78 ரன்கள் விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. இந்த தொடருக்கு நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்தோம். ஏனெனில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறோம். அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். அதே சமயம் மற்ற 9 அணிகளும் சிறந்தவை என்பதை அறிவோம். இப்படிப்பட்ட சூழலில் முதல் வெற்றி பெற்றிருப்பது உற்காகம் அளிக்கிறது. இன்னும் சில வெற்றிகள் வரும் என்று நம்புகிறேன்.

எங்களுக்கே உரிய மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் பட்சத்தில், எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். உலகக் கோப்பை போட்டிக்கு நாங்கள் எண்ணிக்கைக்காக வரவில்லை. போட்டிகளில் வெற்றி பெற்று எங்களுக்கு அடுத்த சுற்று வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். அதற்கு தென்ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்த வேண்டியது அவசியமாகும்' என்றார்.


Next Story