உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்..? - இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்...!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் புதிய உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் தனது 6வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.