குஜராத் அணியின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுமா ஐதராபாத்? - இன்று மோதல்


குஜராத் அணியின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுமா ஐதராபாத்? - இன்று மோதல்
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் ஆவலில் உள்ள குஜராத் அணி இன்று ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

ஆமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.



அடுத்த சுற்று ஆவலில் குஜராத்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நெருங்கி விட்டது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர வலுவாக விளங்கும் குஜராத் அணி, மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலேயே வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்டத்தில் 219 ரன் இலக்கை விரட்டிய குஜராத் அணி 191 ரன்னில் முடங்கி 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ரஷித் கான் (4 விக்கெட் மற்றும் ஆட்டம் இழக்காமல் 79 ரன்கள்) மட்டுமே ஜொலித்தார். டேவிட் மில்லர் (41 ரன்கள்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீச்சும் எடுபடவில்லை.

கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை களைந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் ஆவலில் உள்ள குஜராத் அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் (475 ரன்கள்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (281), விருத்திமான் சஹா (275), டேவிட் மில்லர் (242), விஜய் சங்கரும் (234), பந்து வீச்சில் ரஷித் கான் (23 விக்கெட்), முகமது ஷமி (19), மொகித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் நல்ல நிலையில் உள்ளனர்.



சவாலை சமாளிக்குமா?

மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டதன் மூலம் ஐதராபாத் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு காலியானது. தொடக்க வரிசை வீரர்கள் சோபிக்க தவறியதும், நட்சத்திர பந்து வீச்சாளர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாததும் அந்த அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், அப்துல் சமத்தும், பந்து வீச்சில் மயங்க் மார்கண்டே, மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், நடராஜனும் வலுசேர்க்கிறார்கள். அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டதால் இதற்கு மேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் ஐதராபாத் அணி, குஜராத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு புள்ளிபட்டியலில் முன்னேற்றம் காண முயற்சிக்கும். ஆனால் பலம் பொருந்திய குஜராத்தின் சவாலை சமாளிக்க வேண்டுமென்றால் ஐதராபாத் அணி உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத், ஐதராபாத் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், நூர் அகமது, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், நடராஜன், மயங்க் மார்கண்டே, பசல்ஹக் பரூக்கி.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


Next Story