யாருடைய முடிவு அது....? கேப்டனா?, பயிற்சியாளரா? - லக்னோ அணியை வெளுத்து வாங்கிய சேவாக்...!
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது.
அகமதாபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 56 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் 228 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ தொடக்க வீரர்கள் குவிண்டன் டிகாக், மெயர்ஸ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். மெயிர்ஸ் 48 ரன்னில் அவுட் ஆனார். முதல் விக்கெட் வீழ்ந்த போது லக்னோ 8.2 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தீபக் ஹூடா களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 114 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது 12.2 வது ஓவரில் தீபக் ஹூடா விக்கெட் விழுந்தது. பின்னர், மளமளவென லக்னோ விக்கெட் வீழ்ந்ததால் அந்த அணி 56 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், குஜராத்திற்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி, நட்சத்திர வீரர் விரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத்திற்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வி குறித்து சேவாக் கூறுகையில், லக்னோ 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. அவர்கள் இத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கக்கூடாது. லக்னோவின் முதல் விக்கெட் வீழ்ந்த உடன் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அது நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னஸ், குர்னால் பாண்டியா அல்லது ஆயிஷ் பதோனி என யாராவது களமிறங்கி இருக்க வேண்டும். இவர்கள் கடந்த போட்டியில் சென்னைக்கு எதிராக விரைவாக ரன் அடித்தனர். ஆனால், யார் களமிறங்கியது? தீபக் ஹூடா?.
அந்த தருணத்தில் லக்னோ போட்டியில் தோல்வியடைந்துவிட்டது. லக்னோ அணியின் மிகப்பெரிய தவறு அது. ஒருவேளை நிகோலஸ் பூரன் களமிறங்கியிருந்தால் அவர் ஆடும் விதத்தில் அவர் 20 பந்துகளில் 5 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பார். கடைசி 5 ஓவரில் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் நீங்கள் வெற்றிபெற முடியாது. ஆயிஷ் பதோனி 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். முதல் விக்கெட் வீழ்ந்த உடன் ஆயிஷ் வந்திருந்தால் அவர் அதிக ரன்களை எடுத்திருப்பார். முதல் விக்கெட் வீழ்ந்த உடன் சிறப்பாக செயல்படும் வீரரை களமிறங்கியிருக்க வேண்டும். தீபக் ஹூடாவை அனுப்பியது யார்? அந்த முடிவை எடுத்தது யார்? கேப்டனா? பயிற்சியாளரா? அல்லது அணி நிர்வாகமா?' என கேள்வி எழுப்பினார்.