பாண்ட்யா ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? இர்பான் பதான் கருத்திற்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி


பாண்ட்யா ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? இர்பான் பதான் கருத்திற்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி
x
தினத்தந்தி 2 March 2024 5:14 AM GMT (Updated: 2 March 2024 5:27 AM GMT)

பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா 'ஏ' கிரேடில் இடம்பெற்றுள்ளார்.

மும்பை,

பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடாத சமயத்தில் ரஞ்சி போன்ற முதல்தர போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டது. ரஞ்சி போட்டியில் விளையாட மறுத்த நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரை ஒப்பந்தத்தில் இருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

இருப்பினும் காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எவ்விதமான உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வரும் ஹர்திக் பாண்ட்யா 'ஏ' கிரேடில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத பாண்ட்யாவை உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வைக்க முடியுமா? அவருக்கு ஒரு நியாயம் இஷான், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு நியாயமா? என்று இர்பான் பதான் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் காயத்தால் தம்முடைய உடல் ஒத்துழைக்காததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்று முடிவெடுத்த ஹர்திக் பாண்ட்யா ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என இர்பான் பதானுக்கு மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் 2023-ம் ஆண்டின் உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்கள் அக்டோபர் மாதம் நடந்தபோது உலகக்கோப்பையில் விளையாடிய பாண்ட்யா காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பாண்ட்யா உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஏமாற்றவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "ஹர்திக் பாண்ட்யாவின் விஷயம் மிகவும் எளிதானது. எந்த தவறும் செய்யாதபோது ஏன் அவரை நீங்கள் தண்டிக்க வேண்டும்? அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். அதனாலேயே அவர் இந்தியாவுக்காக டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான தேர்வுப் பட்டியலிலும் இல்லை.

எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத அவரை யாரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு கேட்க முடியாது. காயம் இருக்கும்போது எப்படி அவரால் 4 நாட்கள் விளையாட முடியும். இந்த இடத்தில் அவருக்கு என்ன விதிமுறை? ஸ்ரேயாஸ், இஷானுக்கு என்ன விதிமுறை? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சயீத் முஸ்டாக் அலி கோப்பை அக்டோபர் - நவம்பர் மாதம் நடந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் 2023 உலகக்கோப்பை நடைபெற்றது. மேலும் ஹர்திக் பாண்ட்யாவின் உள்ளூர் அணியான பரோடா விஜய் ஹசாரே கோப்பையில் கடைசியாக விளையாடிய தேதி 2023 டிசம்பர் 5. அதனாலேயே அவர் அந்த தொடரில் விளையாடவில்லை. ஏனெனில் அவர் என்சிஏ'வில் காயத்திலிருந்து குணமடையும் வேலையில் ஈடுபட்டார்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story