ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணியை சமாளிக்குமா டெல்லி? - இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணியை சமாளிக்குமா டெல்லி? - இன்று மோதல்
x

image courtesy: Delhi Capitals twitter

தினத்தந்தி 4 April 2023 12:30 AM GMT (Updated: 4 April 2023 12:30 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த குஜராத்துடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று மோதுகிறது.

புதுடெல்லி,

விறுவிறுப்பு நிறைந்த 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சும், குஜராத் டைட்டன்சும் மல்லுக்கட்டுகின்றன.

டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் பணிந்தது. கேப்டன் வார்னர் (56 ரன்) தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சொதப்பினர். எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் டக்-அவுட் ஆகிப் போனார். தற்போது சொந்த ஊரில் நடப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

டெல்லிக்கு பலவீனமே நட்சத்திர இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது தான். சேத்தன் சகாரியா, முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோரிடம் எதிராளியை மிரட்டும் அளவுக்கு போதிய வேகமில்லை. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நோர்டியா, இங்கிடி நேற்று தான் அணியுடன் இணைந்தனர். அதனால் அவர்கள் உடனடியாக ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார்களா? என்பது சந்தேகம் தான். அதே சமயம் சுழலில் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

பேட்டிங்கை பொறுத்தவரை வார்னர், மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, சர்ப்ராஸ்கான், ரிலீ ரோசவ், ரோமன் பவெல் ஆகியோர் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியம். அப்போது தான் நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு ஓரளவு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் நிலைமை சிக்கல் தான்.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் பொருந்திய அணியாக தென்படுகிறது. சென்னைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணியில் ரஷித்கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். பேட்டிங்கில் சுப்மன் கில் அரைசதம் (63 ரன்) அடித்தார். அவருடன் ஹர்திக் பாண்ட்யா, திவேதியா, விருத்திமான் சஹா, சாய் சுதர்சன், ஒடியன் சுமித், மேத்யூ வேட் உள்ளிட்டோரும் வலு சேர்க்கிறார்கள். அதிரடி பேட்ஸ்மேன் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லரும் இப்போது இணைந்து விட்டார். கால்முட்டி காயத்தால் கேன் வில்லியம்சன் விலகிய போதிலும் அந்த அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே ஆதிக்கத்தை நீட்டிக்கும் முனைப்புடன் குஜராத் வியூகங்களை தீட்டியுள்ளது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி. சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக பார்க்கலாம்.


Next Story