நியூசிலாந்தை சமாளிக்குமா இளம் இந்திய அணி?- முதல் 20 ஓவர் போட்டியில் நாளை மோதல்


நியூசிலாந்தை சமாளிக்குமா இளம் இந்திய அணி?- முதல் 20 ஓவர் போட்டியில் நாளை மோதல்
x

Image Courtesy: Screengrab Twitter BLACKCAPS

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

வெலிங்டன்,

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நாளை தொடங்கி நவம்பர் 22 வரை நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த மோசமான ஆட்டத்தால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இதனால் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.

உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சாஹல், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். அந்த அணியும் உலக கோப்பையில் அரை இறுதி வரை சென்று பாகிஸ்தானிடம் தோற்றது.

பிலிப்ஸ், கான்வே, பெர்குசன், ஜிம்மி நீசம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளும் நாளை மோதுவது 21-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து அணி : கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, பிளேயர் டிக்னர்


Next Story