டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்


டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
x

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் (915 புள்ளி) மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 215 ரன்கள் குவித்து சாதனை படைத்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 51 புள்ளிகள் கூடுதலாக சேகரித்து மொத்தம் 883 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது ஏற்றத்தால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (3-வது இடம்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (4), பாகிஸ்தானின் பாபர் அசாம் (5), டிராவிஸ் ஹெட் (6) ஆகியோர் தலா ஒரு இடம் சரிந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மற்றொரு நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் 20 இடங்கள் எகிறி 27-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்திய தரப்பில் ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும், இரு இடம் சறுக்கிய ரோகித் சர்மா 11-வது இடத்திலும், விராட் கோலி 13-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் அஸ்வின் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள்.


Next Story