'ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியமானது' - இந்திய வீரர் சுப்மன் கில்
வங்காளதேசத்க்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோற்றதால் உத்வேகத்தை இழந்ததாக நினைக்கவில்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அளித்த பேட்டியில், 'இறுதிப்போட்டியில் வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நாங்கள் வெற்றி பெறும் பழக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியமானதாகும். சரியான நேரத்தில் உச்சம் அடைவதும், சரியான தருணத்தில் உத்வேகத்தை பெறுவதும் முக்கியமானதாகும்.
அத்துடன் உத்வேகத்தை தக்கவைக்க வேண்டியதும் முக்கியமானதாகும். ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தால் அது நெருக்கடியை அதிகரிக்கும். இந்த போட்டியில் வெற்றி பெறுவது உலகக் கோப்பை போட்டிக்கு செல்வதற்கு நிறைய உத்வேகத்தையும், நம்பிக்கையும் அளிக்கும். வங்காளதேசத்க்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோற்றதால் உத்வேகத்தை இழந்ததாக நினைக்கவில்லை. கடைசி கட்ட வீரர்களுக்கு நாங்கள் கூடுதலாக 10-15 ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டோம். மற்றபடி நன்றாகவே செயல்பட்டோம்.
இதுபோன்ற ஆடுகளங்களில் இந்த மாதிரி நடக்க தான் செய்யும். இதில் கிடைத்த பாடத்தை ஆசிய கோப்பை இறுதிப்போட்டி மற்றும் உலகக் கோப்பை போட்டியில் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இலங்கை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்த நாங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.