பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி...!


பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி...!
x

image courtesy: Women's Premier League (WPL) twitter

தினத்தந்தி 26 March 2023 9:12 PM IST (Updated: 26 March 2023 9:14 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி 2-வது இடத்தையும், உ.பி.வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.

நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங் 35 ரன்களும் ஷபாலி வர்மா 11 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இசி வாங் மற்றும் ஹைய்லி மேதிவ்யூஸ் தலா 3 விக்கெட்டுகளும் அமெலியா கீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த நிலையில் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story