பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு...!


பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு...!
x

Image Courtesy: Twitter 

தினத்தந்தி 4 March 2023 2:08 PM GMT (Updated: 4 March 2023 5:33 PM GMT)

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் லீக் கிரிக்கெட் போன்று பெண்களுக்கும் 20 ஓவர் போட்டியை நடத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அறிவித்தது.

இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் மொத்தம் 87 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவார்.

ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். உறுப்பு நாடுகளை சேர்ந்த வீராங்கனை அங்கம் வகித்தால் அந்த அணி 5 வெளிநாட்டு வீராங்கனைகளை களம் இறக்கலாம். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியை எட்டும்.

மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது. தினசரி ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மற்ற போட்டிகளை போன்றே நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் உண்டு. போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 கோடியாகும்.

இன்றைய தொடக்க லீக் ஆட்டம் நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக இந்த தொடரின் தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகைகள் கியாரா அத்வானி, க்ரிதி சனோன் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும், பாடகர் ஏபி தில்லானின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து பெண்கள் பிரீமியர் லீக்கின் சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்களும் காட்சிப்படுத்தினர். இதையடுத்து முதல் ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பந்து வீச முடிவு வெய்துள்ளார். இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.


Next Story