பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி "சாம்பியன்"


தினத்தந்தி 26 March 2023 10:47 PM IST (Updated: 27 March 2023 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் சாம்பியன் கோப்பைக்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் கோதாவில் குதித்தன. 'டாஸ்' ஜெயித்த டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இதன்படி மெக் லானிங்கும், ஷபாலி வர்மாவும் டெல்லி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர் இசி வோங் வீசிய 2-வது ஓவரில் பவுண்டரி, சிக்சர் விரட்டிய ஷபாலி வர்மா , அடுத்து சற்று உயரமாக வந்த புல்டாஸ் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். நடுவரிடம் நோ-பால் கேட்ட போது அது சரியான பந்து என்று கூறி விட்டார். இதையடுத்து ஷபாலி வர்மா 11 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய அலிஸ் கேப்சியும்(0) அதே ஓவரில் தாழ்வாக வந்த புல்டாஸ் பந்துக்கு இரையானார். பின்னர் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (9 ரன்) வோங்கின் இன்னொரு ஓவரில் வீழ்ந்தார். 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்க கேப்டன் மெக் லானிங்கும், மரிஜானே காப்பும் போராடினர்.

ஸ்கோர் 73 ஆக உயர்ந்த போது மரிஜானே காப் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கேப்டன் மெக்லானிங் (35 ரன், 29 பந்து, 5 பவுண்டரி) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக அது தான் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த அருந்ததி ரெட்டி (0) தாக்குப்பிடிக்கவில்லை. அதன் பிறகு சுழல் ஜாலத்தில் மிரட்டிய ஹெய்லே மேத்யூஸ், டெல்லி அணியின் ஜெஸ் ஜோனசென் (2 ரன்), மின்னு மணி (1 ரன்), விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா (0) ஆகியோரை வரிசையாக காலி செய்தார்.

டெல்லி 131 ரன்

அப்போது டெல்லி 16 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ரன்களுடன் தள்ளாடியது. இனி டெல்லி கதை முடிந்தது என்று நினைத்தவேளையில் 10-வது விக்கெட்டுக்கு ஷிகா பாண்டேவும், ராதா யாதவும் கைகோர்த்து ஆட்டத்துக்கு உயிர் கொடுத்தனர். கடைசி கட்டத்தில் மும்பையின் மெத்தனபோக்கை சரியாக பயன்படுத்தி அடித்து நொறுக்கிய இவர்கள் ஸ்கோர் 100-ஐ கடக்க வைத்தனர். 19-வது ஓவரில் இசி வோங்கின் பந்து வீச்சில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்ட இவர்கள் கடைசி ஓவரில் இரு சிக்சர் விளாசியதுடன் சவாலான ஸ்கோரை அடையவும் வித்திட்டனர்.

20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. ஷிகா பாண்டே 27 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ராதா யாதவ் 27 ரன்களுடனும் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 24 பந்துகளில் 54 ரன்கள் சேகரித்து வியப்பூட்டினர்.

மும்பை தரப்பில் இசி வோங், மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஹர்மன் ரன்-அவுட்

பின்னர் 132 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் யாஸ்திகா பாட்டியாவும் (4 ரன்), ஹெய்லே மேத்யூசும் (13 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். 3-வது விக்கெட்டுக்கு நாட் சிவெரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து நிதானத்தை கடைபிடித்தனர். இதனால் சிக்கலில் இருந்து படிப்படியாக நிமிர்ந்தனர். ஆனாலும் டெல்லி பவுலர்கள் முடிந்த வரை கடும் நெருக்கடி கொடுத்தனர். ஸ்கோர் 95-ஐ எட்டிய போது ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன்களில் (39 பந்து, 5 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அடுத்து அமெலியா கெர் வந்தார்.

கடைசி 2 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டது. இதில் 19-வது ஓவரை வீசிய ஜோனசெனின் பந்து வீச்சில் மும்பை பேட்டர்கள் 3 பவுண்டரி உள்பட 16 ரன்கள் எடுத்து டென்ஷனை குறைத்தனர். இதனால் கடைசி ஓவரில் 5 ரன் தேவையாக இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை அலிஸ் கேப்சி வீசினார். 2 பந்துகளில் 3 ரன் எடுத்த நிலையில் 3-வது பந்தை நாட் சிவெர் பவுண்டரிக்கு தூக்கிவிட்டு ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.

மும்பை அணி சாம்பியன்

மும்பை அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. நாட் சிவெர் 60 ரன்களுடனும் (55 பந்து, 7 பவுண்டரி), அமெலியா கெர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் முதல் சீசனிலேயே மும்பை அணி மகுடம் சூடி கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்கள் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை பட்டம் வென்றிருப்பது நினைவு கூரத்தக்கது.

வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

801 பவுண்டரி, 159 சிக்சர்...

5 அணிகள் பங்கேற்ற பெண்கள் பிரிமீயர்லீக் கிரிக்கெட்டில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடந்தன. இதில் 801 பவுண்டரியும், 159 சிக்சரும் அடிக்கப்பட்டு உள்ளன. அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் டெல்லி கேப்டன் மெக் லானிங் 345 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து ஆரஞ்சுநிற தொப்பியை வசப்படுத்தினார். விக்கெட் வீழ்த்தியதில் மும்பை பவுலர் ஹெய்லே மேத்யூஸ், உ.பி. வாரியர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் எக்லெஸ்டன் தலா 16 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பிடித்தனர்.


Next Story