பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்...!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியட்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இந்த தொடரின் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணியும், குஜராத் அணியும் மோத உள்ளன. தற்போது வரை இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத மும்பை அணியை வீழ்த்தி, தொடக்க ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் குஜராத் அணி ஆடும்.
அதே வேளையில் தனது வெற்றிபயணத்தை தொடர மும்பை அணி கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.