மகளிர் டெஸ்ட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா


மகளிர் டெஸ்ட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
x

image courtesy; twitter/@ICC

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனை சதர்லேண்ட் இரட்டை சதம் (210 ரன்கள்) அடித்து அசத்தினார்.

பெர்த்,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை 1-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா இழந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 76 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனே லூஸ் 26 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டர்சி பிரவுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதர்லேண்ட் இரட்டை சதம் (210 ரன்கள்) அடித்து அசத்தினார்.

பின்னர் 499 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக டெல்மி டக்கர் மற்றும் சோலி ட்ரையான் தலா 64 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கிம் கார்த், டர்சி பிரவுன், கார்ட்னர் மற்றும் சுதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 284 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரட்டை சதம் அடித்து அசத்திய சதர்லேண்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story