உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்தை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்...!
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி 56 ரன், ரஹ்மத் ஷா 52 ரன் அடித்தனர்.
லக்னோ,
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து தரப்பில் ஏங்கல்பிரெக்ட் 58 ரன்கள் அடித்தார். இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 10 ரன், இப்ராகிம் 20 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துலா ஷாகிதி ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதில் ரஹ்மத் ஷா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிதியுடன் ஓமர்சாய் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி 56 ரன், ரஹ்மத் ஷா 52 ரன் அடித்தனர்.