உலகக்கோப்பை; சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை சமன் செய்த விராட் கோலி...!


உலகக்கோப்பை; சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை சமன் செய்த விராட் கோலி...!
x

Image Courtesy: AFP

நெதர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்.

பெங்களூரு,

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இந்த உலகக்கோப்பையில் மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். நெதர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்த உலகக்கோப்பையில் விராட்கோலி 7-வது முறையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். அவர் 5 அரைசதமும், 2 சதமும் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் சச்சின், ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்துள்ளார்.

அதாவது ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் ஷகிப் உடன் கோலி முதல் இடத்தை பகிர்ந்துள்ளார். டெண்டுல்கர் 2003 உலகக்கோப்பையிலும் (1 சதம் + 6 அரைசதம்), ஷகீப்-அல்-ஹசன் 2019 உலகக்கோப்பையிலும் (2 சதம் + 5 அரைசதம்) 7 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 50 ரன்னுக்கு மேல் எடுத்தால் கோலி புதிய சாதனை படைப்பார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் இருந்த குயின்டன் டி காக்கையும் (தென்ஆப்பிரிக்கா) கோலி முந்தினார்.அவர் 9 ஆட்டங்களில் 594 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

கோலி 594 ரன்னுடன் முதல் இடத்திலும், டிகாக் 591 ரன்னுடன் 2ம் இடத்திலும், ரச்சின் ரவீந்திரா 565 ரன்னுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆடம் ஜாம்பா (22 விக்கெட்) முதல் இடத்திலும், தில்ஷன் மதுஷான்கா (21 விக்கெட்) 2ம் இடத்திலும், ஷாகின் அப்ரிடி (18 விக்கெட்) 3ம் இடத்திலும் உள்ளனர்.


Next Story