வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு அவுட்...!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
டொமினிக்,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் அறிமுக வீரராக களமிறங்கப்பட்டார். ஆட்டம் தொடங்கியது முதலே ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் சதம் விளாசினார். அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசிய 17வது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.
இந்நிலையில், போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ஸ்வால் 150 ரன்களை கடந்தார். அவர் 171 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார்.
ஜெய்ஸ்வால் 387 பந்துகளில் 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அல்சாரி ஜோசப் பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெஸ்ட் இண்டீசை விட 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கோலி 52 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.