டெஸ்டில் இரண்டு நாடுகளுக்காக சதம் அடித்த இரண்டாவது வீரரானார் ஜிம்பாப்வேயின் கேரி பேலன்ஸ்
, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 378 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
புலவாயோ,
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதமடித்து அசத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் சதமடித்து 182 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 336 ரன்கள் குவித்தது. சந்தர்பால் 207 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேரி பேலன்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
இதன் மூலம் இரண்டு நாடுகளுக்காக டெஸ்ட் சதம் அடித்த இரண்டாவது வீரரானார் ஜிம்பாப்வேயின் கேரி பேலன்ஸ். அவர் கடந்த பத்தாண்டுகளில் இங்கிலாந்துக்காக நான்கு சதங்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 378 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நான்காம் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.