ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கொல்கத்தா


ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில்  கொல்கத்தா
x
தினத்தந்தி 13 Dec 2016 9:30 PM GMT (Updated: 13 Dec 2016 6:12 PM GMT)

மும்பை, ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையுடன் டிரா செய்த கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஐ.எஸ்.எல். கால்பந்து 3–வது இந்தியன் கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியின் 2–வது சுற்றில் அட்லெ

மும்பை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையுடன் டிரா செய்த கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

3–வது இந்தியன் கால்பந்து தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியின் 2–வது சுற்றில் அட்லெடிகோ டீ கொல்கத்தா– மும்பை சிட்டி எப்.சி. அணிகள் சந்தித்தன. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கொல்கத்தா அணி 3–2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற முனைப்புடன் கொல்கத்தா வீரர்கள் அடியெடுத்து வைத்தனர்.

ஆனால் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் மும்பை வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். முந்தைய ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற மும்பை கேப்டன் டியோகோ பார்லன் ஆடவில்லை.

இறுதிப்போட்டியில் கொல்கத்தா

6–வது நிமிடத்தில் மும்பை வீரர் சுனில் சேத்ரி, கொல்கத்தா வீரர்கள் செய்த தவறால் கோல் நோக்கி தனியாக முன்னேறினார். கோல் கீப்பர் மட்டுமே நின்ற நிலையில் அவர் அடித்த ஷாட்டை கொல்கத்தா கோல் கீப்பர் மஜூம்தார் அபாரமாக தடுத்து நிறுத்தினார். பந்து, மும்பை அணியின் பக்கமே அதிகமான நேரம் (56 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும்  மும்பைக்கு அதிர்ஷ்டம் இல்லை. 43–வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராபெர்ட் 2–வது முறையாக மஞ்சள் அட்டை பெற்று, அது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் வெளியேற்றப்பட்டார்.

இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்ட கொல்கத்தா அணி அதன் பிறகு தடுப்பாட்ட யுக்தியை கையாண்டது. அவர்களின் தடுப்பு அரணை மும்பை வீரர்களால் கடைசி வினாடி வரை உடைக்க முடியவில்லை.

ஆட்டம் முடிவடைவதாக நடுவர் விசில் ஊதிய தருணத்தில் இரு அணி வீரர்கள் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெலேன்கோசோ (கொல்கத்தா), தியாகோ குனா (மும்பை) ஆகியோர் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளானார்கள்.

முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0–0) டிராவில் முடிந்தது. இரண்டு அரைஇறுதி ஆட்டங்களின் அடிப்படையில் 3–2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே 2014–ம் ஆண்டில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்

இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறும் மற்றொரு அரைஇறுதியின் 2–வது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ்–டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன. முதலாவது சுற்றில் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட கேரளா அணி டிரா செய்தாலே போதுமானது. அதே நேரத்தில் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி அணியால் இறுதிப்போட்டியை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

Next Story