ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின்


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின்
x
தினத்தந்தி 25 Oct 2017 10:07 PM GMT (Updated: 25 Oct 2017 10:06 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா,

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, மாலியை வீழ்த்தியது.

ஜூனியர் கால்பந்து

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் (17 வயதுக்குட்பட்டோர்), கொல்கத்தாவில் நேற்று மாலை அரங்கேறிய முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில், ஏறக்குறைய 64 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, இங்கிலாந்துடன் மல்லுகட்டியது.

கால்பந்தில் கோலோச்சும் அணிகளில் ஒன்றான பிரேசில், இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து வீரர்களின் அதிரடி தாக்குதல் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

10-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ரையான் பிரிஸ்டர் கோல் அடித்தார். 21-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வெஸ்லி பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து 39-வது நிமிடத்தில் பிரிஸ்டர் மேலும் ஒரு கோல் திணித்தார். இதையடுத்து முதல் பாதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பிரிஸ்டர் ‘ஹாட்ரிக்’ கோல்

பிற்பாதியிலும் இங்கிலாந்து வீரர்களின் துடிப்பான ஆட்டம் பிரேசிலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. 77-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மாற்றுஆட்டக்காரர் எமிலி சுமித் ரோவ் தட்டிக்கொடுத்த பந்தை, 4 தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி பிரிஸ்டர் நேர்த்தியாக கோலாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஏற்கனவே கால்இறுதியிலும் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார். ஒரே உலக கோப்பையில் இரண்டு முறை ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை பிரிஸ்டர் பெற்றார். இதன் மூலம் நடப்பு தொடரில் அவரது கோல்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

இங்கிலாந்து வெற்றி

பந்து அதிகமாக (55 சதவீதம்) பிரேசில் வசமே சுற்றி வந்தது. இலக்கை நோக்கி ஷாட் அடிப்பதிலும் இங்கிலாந்தை காட்டிலும் பிரேசிலின் (10 முறை) கையே ஓங்கி இருந்தது. ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தான் இல்லை.

முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 32 ஆண்டு கால ஜூனியர் கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்பெயின் அபாரம்

மும்பையில் நடந்த இன்னொரு அரைஇறுதியில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆப்பிரிக்க அணியான மாலியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணியில் அபெல் ரூஸ் (19 மற்றும் 43-வது நிமிடம்), பெரேன் டோரஸ் (71-வது நிமிடம்) கோல் அடித்தனர்.

கொல்கத்தாவில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) இரவு நடக்கும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் சந்திக்கின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை ஜூனியர் உலக கோப்பையை வென்றதில்லை.

முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில்-மாலி அணிகள் மோத உள்ளன.

Next Story