ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் தகுதி


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் தகுதி
x

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பாரீஸ்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடக்கிறது. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடருக்கு போட்டியை நடத்தும் ஜெர்மனி தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலம் தான் தகுதி பெறும். இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் அணி ஆம்ஸ்டர்டாமில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. பிரான்ஸ் அணியில் கைலியன் எம்பாப்பே 7-வது மற்றும் 53-வது நிமிடங்களில் கோல் அடித்தார். தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்த பிரான்ஸ் அணி (18 புள்ளி) இன்னும் 2 ஆட்டங்கள் மிஞ்சி இருக்கும் நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேபோல் வியன்னாவில் நடந்த 'எப்' பிரிவு ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை சாய்த்து 5-வது வெற்றியை தனதாக்கியது. 5 வெற்றி, ஒரு டிராவுடன் 16 புள்ளிகள் பெற்று இருக்கும் பெல்ஜியம் அணி இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் தகுதி கண்டது. மேலும் 'ஜெ' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி போர்டோவில் நடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணியில் ரமோஸ் ஒரு கோலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோலும் அடித்தனர். 2 கோல் அடித்ததன் மூலம் ரொனால்டோவின் சர்வதேச கோல் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்தது. தொடர்ந்து 7-வது வெற்றியை சொந்தமாக்கிய போர்ச்சுகல் அணி இன்னும் 3 ஆட்டங்கள் மீதம் இருக்கும் நிலையில் தகுதி பெற்று அசத்தியது.


Next Story