அர்ஜென்டினா கால்பந்து அணியுடன் மோதும் வாய்ப்பை நிராகரித்த இந்தியா

உலக சாம்பியனுக்கு எதிராக விளையாட கிடைத்த இந்தஅரிய வாய்ப்பை இந்திய கால்பந்து சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
புதுடெல்லி,
லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவு சர்வதேச போட்டியில் விளையாட முடிவு செய்தது. அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்தியாவுடன் மோத விரும்பி, இந்திய கால்பந்து சம்மேளனத்தை அணுகியது. ஆனால் உலக சாம்பியனுக்கு எதிராக விளையாட கிடைத்த இந்தஅரிய வாய்ப்பை இந்திய கால்பந்து சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது குறித்து இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷஜி பிரபாகரன் கூறுகையில், 'அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டும். அதற்கு வலுவான ஸ்பான்சர்ஷிப் தேவை. அர்ஜென்டினா அணிக்கான போட்டி கட்டணமும் (ஏறக்குறைய ரூ.40 கோடி) மிக அதிகம். அந்த அளவுக்கு எங்களிடம் நிதிஆதாரம் இல்லாததால் வாய்ப்பை தவிர்க்க வேண்டியதாகி விட்டது' என்றார்.
இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி தங்களது இரு நட்புறவு ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவுடன் மோதி இரண்டிலும் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.






