ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் இன்று மோதல்
x

image courtesy: Chennaiyin FC twitter

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்காலை சந்திக்கிறது.

கொல்கத்தா,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்காலை சந்திக்கிறது.

சென்னை அணி 3 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவிடம் தோற்று இருந்தது. ஈஸ்ட் பெங்கால் அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே.மோகன் பகானிடம் பணிந்து இருந்தது.

இரண்டு வார ஓய்வால் புத்துணர்ச்சி பெற்று இருக்கும் சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் களம் காணுகிறது. கடந்த ஆட்டத்தில் இடைநீக்கம் காரணமாக ஆடாத கோல்கீப்பர் தேவ்ஜித் மசூம்தார் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவது சென்னை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறுகையில், 'எங்களுக்கு கிடைத்த இடைவெளியை மீண்டு வருவதற்கு சரியாக பயன்படுத்தினோம். எங்களது ஆட்ட வியூகங்களை மறுஆய்வு செய்ததுடன், கடினமாகவும் பயிற்சி செய்தோம். நாங்கள் போட்டிக்கான உத்வேகத்தை பெற்றுள்ளோம். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள வலுவான மனஉறுதியுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எங்கள் வீரர்கள் நல்ல மனஉறுதியுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈஸ்ட் பெங்காலை அவர்களது சொந்த ஊரில் சந்திப்பது சவாலாக இருக்கும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்றார்.

முன்னதாக நேற்றிரவு கோவாவில் நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 3-வது வெற்றியை சுவைத்தது.


Next Story