"இது தான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை"- மெஸ்ஸியின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்


இது தான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை- மெஸ்ஸியின் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்
x

Image Courtesy: AFP  

தினத்தந்தி 6 Oct 2022 6:50 PM GMT (Updated: 6 Oct 2022 7:03 PM GMT)

உலகின் 'ஆல் டைம்' தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு.

பியூனஸ் அயர்ஸ்,

உலகமே உற்று நோக்கி இருக்கும் கால்பந்து உலகக்கோப்பை திருவிழா அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலகக்கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அணிகளில் அர்ஜென்டினா தவிர்க்க முடியாத அணி. அந்த அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் லியோனல் மெஸ்ஸி.

உலகின் 'ஆல் டைம்' தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு. 2006 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கிய இவர் இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான் தன்னுடைய கடைசி கால்பந்து உலகக்கோப்பை என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று நிருபர் ஒருவருடன் நேர்காணலில் பேசிய மெஸ்ஸி, "நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலகக் கோப்பை. இந்த முடிவை எடுத்துவிட்டேன். உலகக் கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். உண்மை என்னவென்றால், ஒரு சிறிய பதற்றம் உள்ளது.

என்ன நடக்கப் போகிறது? இந்த உலகக்கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது? என்ற பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன், "என்று கூறினார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதே நேரத்தில் கத்தார் தொடர் தனது கடைசி உலகக்கோப்பை என மட்டுமே தெரிவித்துள்ள மெஸ்ஸி தனது கடைசி போட்டி என்று குறிப்பிடவில்லை. இதனால் அவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகும் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அடுத்த கால்பந்து உலக கோப்பை தொடருக்கு மேலும் நான்கு ஆண்டுகள் உள்ளதால் அந்த இடைவெளியில் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story