மான்செஸ்டர் யுனைட்டெட் தொடர்பான சர்ச்சை: ரொனால்டோவுக்கு கோலி மறைமுக ஆதரவு?


மான்செஸ்டர் யுனைட்டெட் தொடர்பான சர்ச்சை: ரொனால்டோவுக்கு கோலி மறைமுக ஆதரவு?
x

 Image Courtesy: AFP 

ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சென்னை,

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக 'பாலோயர்களை' கொண்ட பெருமைக்குரியவர். சமகால கால்பந்து விளையாட்டின் மகத்தான வீரராக ரொனால்டோ திகழ்ந்து வருகிறார்.

இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு முதல் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, 2018ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் தனது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் நடப்பு கால்பந்து சீசனில் அந்த அணிக்காக பல்வேறு போட்டிகளில் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. இதனால் ரொனால்டோ-மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குள் பிரச்சினை இருக்கிறதா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகளவில் விவாதிக்க தொடங்கினர்.

பின்னர் மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டெனை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அதை தொடர்ந்து ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் ரொனால்டோவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதுதொடர்பாக பீட்டர்சன் கூறுகையில், தன்னை மான்செஸ்டர் யுனைடெட் அணி நம்பவில்லை என்று ரொனால்டோ கூறியது உண்மையாக இருந்தால், அது மன்னிக்கவே முடியாது. ரொனால்டோ கூறியதை உண்மை என்று கூறவில்லை. ஆனால் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்த வீடியோவை 'லைக்' செய்துள்ளார். இதனால் கோலி ரொனால்டோவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி தான் ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story