பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் 'டிரா'


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் டிரா
x

Image Courtesy : @FIFAWWC twitter

அர்ஜென்டினா அணி 73 நிமிடங்களுக்கு பிறகு அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து தோல்வியை தவிர்த்தது.

சிட்னி,

32 அணிகள் இடையிலான பெண்கள் 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. நியூசிலாந்தில் உள்ள டுனெடினில் நடந்த ('ஜி' பிரிவு) ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பந்தை தனது கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து இருந்த அர்ஜென்டினா அணி 73 நிமிடங்களுக்கு பிறகு அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து சரிவில் இருந்து மீண்டு தோல்வியை தவிர்த்தது.

தென்ஆப்பிரிக்க அணியில் லிண்டா மொதாலோ 30-வது நிமிடத்திலும், தெம்பி காட்லானா 66-வது நிமிடத்திலும் கோலடித்தனர். அர்ஜென்டினா தரப்பில் சோபியா பிரான் 74-வது நிமிடத்திலும், ரோமினா நூனெஸ் 79-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினர். தங்களது முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, சுவீடனிடமும், அர்ஜென்டினா அணி, இத்தாலியிடமும் தோற்று இருந்தன.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடந்த (டி பிரிவு) ஆட்டம் ஒன்றில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கியது.

இதே பிரிவில் அடிலெய்டில் நடந்த விறுவிறுப்பான மற்றொரு ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதீயை வென்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய சீனா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் சீனா அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இன்றைய லீக் ஆட்டங்களில் சுவீடன்-இத்தாலி, பிரான்ஸ்- பிரேசில், பனாமா-ஜமைக்கா அணிகள் மோதுகின்றன.


Next Story