ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 6 Aug 2023 1:30 AM IST (Updated: 6 Aug 2023 12:24 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி

7-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 'ரவுண்ட் ராபின் லீக்' முறையில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த ஆக்கி திருவிழாவில் நேற்று ஓய்வு நாளாகும். 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

தென்கொரியா-சீனா

மாலை 4 மணிக்கு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா அணி, சீனாவை எதிர்கொள்கிறது. முதலாவது ஆட்டத்தில் ஜப்பானை (2-1) வீழ்த்திய தென்கொரியா அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் (1-1) டிரா கண்டது. சீனா அணியை பொறுத்தமட்டில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவிடமும் (2-7), அடுத்து மலேசியாவிடம் (1-5) உதைவாங்கிய சீனா அணி கடைசி இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த தென் கொரியாவின் சவாலை சீனா சமாளிக்குமா என்பது சந்தேகம் தான்.

இதைத்தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு தொடங்கும் 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. முதலாவது ஆட்டத்தில் மலேசியாவிடம் வீழ்ந்த அந்த அணி, 2-வது ஆட்டத்தில் தென்கொரியாவுடன் டிரா கண்டது. தனது முதலாவது ஆட்டத்தில் தென்கொரியாவிடம் தோற்று இருந்த ஜப்பான் அணி அடுத்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி இந்தியாவுடன் டிரா செய்தது. தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் ஒருசேர ஜொலிக்கும் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் பாகிஸ்தான் அணி உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

இந்தியா-மலேசியா பலப்பரீட்சை

இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அணியான இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் ஜப்பானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

மலேசிய அணி, பாகிஸ்தானையும் (3-1), சீனாவையும் (5-1) அடுத்தடுத்து துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நல்ல உத்வேகத்துடன் இருக்கும் மலேசிய அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப இந்திய அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பயிற்சியாளர் கருத்து

சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் 6 கோல் அடித்து அசத்திய இந்திய அணி, ஜப்பானுக்கு எதிராக 15 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை உருவாக்கி அதில் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியின் பலமே அந்த ஆட்டத்தில் பலவீனமானது. பெனால்டி கார்னர் வாய்ப்யை கோலாக மாற்றாமல் கோட்டை விட்டதற்கு அதிருப்தி தெரிவித்து இருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'பெனால்டி கார்னர் அல்லது பீல்டு கோல் என எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதனை சரியாக நிறைவேற்றாமல் போனால் அது கவலைக்குரிய விஷயம் தான். அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் விரும்பிய வகையில் எங்களது ஆட்டத்தை ஆடினோம். விரும்பியபடி ஆட்டத்தை நிறைவு செய்வதில் எங்கள் இலக்கை நெருங்கி விட்டதாகவே நினைக்கிறேன். பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க வீரர்கள் நல்ல முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஜப்பான் அணியினர் தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு முறியடித்தனர். இது ஒரு நல்ல பாடமாகும். அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம்' என்றார்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கருத்து தெரிவிக்கையில், 'ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி கார்னரை கோலாக மாற்ற தவறியதால் எங்களுக்கு நெருக்கடி எதுவுமில்லை. ஜப்பானுக்கு எதிராக சிறப்பாக ஆட்டத்தை ஆடினோம். ஆனால் ஜப்பான் அணியின் தடுப்பு ஆட்டம் நன்றாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரையின்படி செயல்பட்டு வருகிறோம். எனவே அடுத்து நடைபெறும் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சீனாவுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தில் சில முயற்சிகளை மேற்கொண்டோம். அதுபோல் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் புதிய யுக்தியை முயற்சிப்போம்' என்றார்.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story