ஆசிய விளையாட்டு போட்டி; இந்திய ஆக்கி அணிகள் அறிவிப்பு


ஆசிய விளையாட்டு போட்டி;  இந்திய ஆக்கி அணிகள் அறிவிப்பு
x

image courtesy; twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 1 Sep 2023 4:53 AM GMT (Updated: 1 Sep 2023 4:57 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு,

ஆசிய விளையாட்டு

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டுக்கான இந்திய ஆக்கி அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக ஹர்திக் சிங்கும் தொடருகிறார்கள். கடந்த மாதம் தொடக்கத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஆகாஷ்தீப் சிங், எஸ்.கார்த்தி, ஜூக்ராஜ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சீனியர் வீரர் லலித் உபாத்யாய் அணிக்கு திரும்பி இருக்கிறார். சஞ்சய், அபிஷேக் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஒரே தமிழக வீரரான கார்த்தி அந்த போட்டியில் சிறப்பாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அணிக்கு சவிதா கேப்டன்

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டனாக கோல்கீப்பர் சவிதா நீடிக்கிறார். கடந்த ஜூலை மாதம் நடந்த ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் தொடரில் இடம் பெற்று இருந்த சுஷிலா சானு புர்க்ராம்பாம், பல்ஜீத் கவுர், ஜோதி ஆகியோருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர் ஆகியவை அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள எஞ்சிய அணிகளாகும். இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை (வருகிற 24-ந் தேதி) சந்திக்கிறது.

பெண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்கொரியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரை (வருகிற 27-ந் தேதி) எதிர்கொள்கிறது.

வீரர்கள் பட்டியல்

ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்வதையொட்டி இந்திய ஆக்கி அணிகளுக்கு வழியனுப்பு விழா ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் பெங்களூருவில் நேற்று நடந்தது. வீரர், வீராங்கனைகள் வருகிற 19-ந் தேதி சீனா புறப்படுகிறார்கள். அதுவரை தொடர்ந்து பெங்களூரு 'சாய்' மையத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

ஆசிய போட்டிக்கான இந்திய அணிகள் வருமாறு:-

ஆண்கள் அணி: ஸ்ரீஜேஷ், கிரிஷன் பதாக், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், சுமித், நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷாம்ஷெர் சிங், அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.

பெண்கள் அணி:சவிதா (கேப்டன்), பிச்சுதேவி கரிபாம், தீபிகா, லாம்ரெம்சியாமி, மோனிகா, நவ்னீத் கவுர், நேஹா, நிஷா, சோனிகா, உதிதா, இஷிகா சவுத்ரி, தீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, வைஷாலி விட்டல் பால்கி, நிக்கி பிரதான், சுஷிலா சானு, சலிமா டெடி.


Next Story