ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி


ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி
x

ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் என்று இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கூறினார்.

பெங்களூரு,

இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஆகஸ்டு 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதையொட்டி இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் முதல்முறையாக சென்னையில் விளையாட உள்ளனர். 2007-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று தக்கவைத்தது குறித்து மூத்த வீரர்கள் பேசியது நினைவில் இருக்கிறது. அது இந்தியாவுக்கு மிகச்சிறந்த ஒரு போட்டியாக அமைந்தது.

ஆசிய விளையாட்டில் (சீனாவில் செப்டம்பர்-அக்டோபர்) ஏறக்குறைய இதே அணிகளுடன் தான் மோத உள்ளோம். எனவே இந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்ப்பதற்கு உகந்த ஒரு தொடராக சென்னையில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இருக்கும். ஆசிய விளையாட்டுக்கு முன்பாக எங்களை சோதிக்கும் ஒரு போட்டியாக இது இருக்கும்.

மேலும் எங்களது எதிரணியை புரிந்து கொள்வதற்கும், அதற்கு ஏற்ப இன்னும் சிறப்பாக ஆசிய விளையாட்டுக்கு தயாராவதற்குரிய வாய்ப்பையும் சென்னை போட்டி வழங்குகிறது. ஆசிய விளையாட்டு ஆக்கியில் தங்கப்பதக்கம் வென்று 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்குக்கு நேரடியாக தகுதி பெறுவதே எங்களது இலக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story