'பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க தவறியதே இந்தியாவின் தோல்விக்கு காரணம்' - ஆக்கி இந்தியா தலைவர் பேட்டி


பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க தவறியதே இந்தியாவின் தோல்விக்கு காரணம் - ஆக்கி இந்தியா தலைவர் பேட்டி
x

image courtesy: Hockey India twitter

உலகக் கோப்பை ஆக்கியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க தவறியதே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறினார்.

புவனேஸ்வர்,

உலகக் கோப்பை ஆக்கியில் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்த தவறியதே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறினார்.

ஒடிசாவில் நடந்து வரும் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் நியூசிலாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. ஒரு கட்டத்தில் இந்தியா 3-1 என்று வலுவான முன்னிலையில் இருந்த நிலையில் நியூசிலாந்து மேலும் இரு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் பணிந்தது.

உலகத் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய அணி குறைந்தது அரைஇறுதிக்கு முன்னேறும் என்பதே ஆக்கி நிபுணர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் கால்இறுதிக்கு முந்தைய சுற்றோடு நடையை கட்டி விட்டது. 1975-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் எந்த பதக்கமும் வெல்லாத இந்தியாவின் நீண்ட கால ஏக்கம் இந்த முறையும் தொடருகிறது.

இந்தியாவின் தோல்விக்கு காரணம் குறித்து ஆக்கி இந்தியா தலைவரும், முன்னாள் கேப்டனுமான திலிப் திர்கே நேற்று கூறியதாவது:-

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அண்மையில் புரோ ஆக்கி போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் நன்றாக ஆடினார். இதனால் உலகக் கோப்பை போட்டியில் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் உலகக் கோப்பையில், திடீரென அவரது ஆட்டத்திறன் குறைந்து விட்டது. அது அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நவீனகால ஆக்கியில் பெனால்டி கார்னரை கோலாக்கும் வித்தை தான் முக்கியமானது. அதற்கு ஏற்ப தான் நமது திட்டமிடல் இருக்கும். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நாம் ஒலிம்பிக் ஆக்கியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதித்தோம். ஆனால் இந்த உலகக் கோப்பையில் கால்இறுதிக்கு கூட முன்னேறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்னது போல் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்காவிட்டால் பின்னடைவை சந்திக்க வேண்டி இருக்கும். அது தான் 2-வது சுற்று ஆட்டத்தில் நிகழ்ந்தது. பெனால்டி கார்னரை கோலாக்குவது தான், இந்திய அணியின் பலமே. அதனால் தான் ஹர்மன்பிரீத் சிங் மீது நிறைய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் அவரது ஷாட்டுகள் கோலாகவில்லை. முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை இதை பார்த்தோம். பெரும்பாலான பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்க தவறியதே தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

அதுமட்டுமின்றி நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தோம். ஆனால் தடுப்பு கட்டமைப்பில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். பெனால்டி ஷூட்-அவுட்டில் எங்களது இரு கோல் கீப்பர்களும் (ஸ்ரீஜேஷ், கிரிஷன் பதாக்) அபாரமாக செயல்பட்டு வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்தனர். ஆனால் நாங்கள் வாய்ப்புகளை கோட்டை விட்டதால் தோல்வியை தழுவ நேரிட்டது. வெற்றி வாய்ப்பில் இருந்து இந்த ஆட்டத்தை நியூசிலாந்துக்கு தாரை வார்த்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மொத்தம் 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் இந்தியாவுக்கு கிடைத்தது. அதில் 2-ஐ மட்டுமே கோலாக மாற்றினோம். மேலும் சில கோல்கள் அடித்திருக்க வேண்டும். மொத்தத்தில் இந்த தொடரில் சில வீரர்கள் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. ஆனால் விளையாட்டில் இது சகஜம். இதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணி இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் கிடைத்த 26 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 5-ஐ மட்டுமே கோலாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story