நேசன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'


நேசன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்
x

image courtesy: HI Media via ANI

இந்திய அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம், ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

வலேன்சியா,

பெண்களுக்கான முதலாவது நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயினின் வலேன்சியாவில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் மோதின.

இதில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றிக்குரிய கோலை 6-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் அடித்தார். இதன் மூலம் 2023-24-ம் ஆண்டு பெண்கள் புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இடத்தை இந்தியா உறுதி செய்தது.

இந்திய கேப்டனும், கோல் கீப்பருமான சவிதா புனியா இந்த தொடரின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். நேசன்ஸ் போட்டியில் அசத்திய இந்திய அணியினரை பாராட்டியுள்ள ஆக்கி இந்தியா அமைப்பு, அணியில் இடம் பெற்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும், பயிற்சி உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது.


Next Story