ரேபரேலியில் உள்ள ஆக்கி ஸ்டேடியத்துக்கு நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் பெயர்


ரேபரேலியில் உள்ள ஆக்கி ஸ்டேடியத்துக்கு நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் பெயர்
x

ஆக்கி ஸ்டேடியத்துக்கு இந்திய பெண்கள் ஆக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள எம்.சி.எப். ஆக்கி ஸ்டேடியத்துக்கு இந்திய பெண்கள் ஆக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட ராணி ராம்பால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், 'ஆக்கி விளையாட்டுக்கு நான் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரேபரேலி எம்.சி.எப். ஆக்கி ஸ்டேடியத்துக்கு, 'ராணி பெண்கள் ஆக்கி மைதானம்' என்று மறுபெயரிட்டு இருப்பதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனது உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

இது எனக்கு பெருமையுடன், மிகவும் உணர்வுபூர்வமான தருணமாகும். ஏனெனில் தனது பெயரில் மைதானத்தை கொண்டுள்ள முதல் ஆக்கி வீராங்கனை என்ற சிறப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனை நான் இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு சமர்ப்பிக்கிறேன். இது அடுத்த தலைமுறை ஆக்கி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

அரியானாவை சேர்ந்த 28 வயதான ராணி ராம்பால் இந்திய அணிக்காக 254 போட்டிகளில் ஆடி 120 கோல்கள் அடித்து இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக உலகக் கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை தவறவிட்ட ராணி ராம்பால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அணிக்கு திரும்பி விளையாடி வருகிறார்.


Next Story