புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி - ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது


புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி - ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது
x

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

ரூர்கேலா,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தும். இந்த தொடரில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

திரில்லிங்காக நகர்ந்த இந்த போட்டி வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது. இந்திய அணி தரப்பில் விவேக் சாகர் பிரசாத் (2-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (47-வது நிமிடம்), ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எப்ராம்ஸ் (37-வது நிமிடம்), டிம் ஹோவர்ட் (52-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதல் 5 வாய்ப்புகளில் இந்தியா (கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்), ஆஸ்திரேலியா (ஜாக் ஹார்விட், கிரேக் மார்விஸ், ஜாக் வெல்ச்) அணிகள் தலா 3 வாய்ப்புகளை கோலாக்கின. 2 வாய்ப்புகளை வீணடித்தன. சமநிலை நீடித்ததால் அடுத்து சடன் டெத் முறை கையாளப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். ஆஸ்திரேலிய வீரர் ஜாக் வெல்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அட்டகாசப்படுத்தியது. அந்த அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்திலும் இந்தியா வென்று (5-4) இருந்தது.

இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடியுள்ள இந்தியா 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு இது 6-வது தோல்வியாகும். இந்தியா தனது அடுத்த லீக்கில் மே 26-ந்தேதி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.


Next Story