தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x

தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் முதலாவது தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இந்த போட்டியில் இருந்து 30 பேர் கொண்ட தென் மண்டல அணி தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அதில் இருந்து தேர்வு செய்யப்படும் அணி மண்டலங்களுக்கு இடையிலான சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும். அந்த போட்டியின் முடிவில் இந்திய பயிற்சி முகாமுக்கு 45 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் இருந்து இந்திய சப்-ஜூனியர் ஆக்கி அணிக்கான வீரர், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதுடன் வெளிநாட்டு தொடர்களில் விளையாட ஆக்கி இந்தியா சார்பில் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் பெண்கள் பிரிவு லீக் ஆட்டங்களில் புதுச்சேரி-கர்நாடகா (காலை 6.30 மணி), ஆந்திரா-கேரளா (காலை 8.15 மணி), தெலுங்கானா-தமிழ்நாடு (காலை 10 மணி), ஆண்கள் பிரிவு லீக் ஆட்டங்களில் கர்நாடகா-புதுச்சேரி (பகல் 11.45 மணி), கேரளா-ஆந்திரா (பிற்பகல் 2 மணி), தமிழ்நாடு-தெலுங்கானா (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்த தகவலை தமிழ்நாடு ஆக்கி அமைப்பு தலைவரும், ஆக்கி இந்தியா பொருளாளருமான சேகர் மனோகரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ், நெல்லை மாவட்ட தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story