உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: கரோலினாவை பழிதீர்த்தார், சிந்து அரைஇறுதிக்கும் தகுதி


உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: கரோலினாவை பழிதீர்த்தார், சிந்து அரைஇறுதிக்கும் தகுதி
x
தினத்தந்தி 16 Dec 2016 9:15 PM GMT (Updated: 16 Dec 2016 7:40 PM GMT)

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: கரோலினாவை பழிதீர்த்தார், சிந்து அரைஇறுதிக்கும் தகுதி

துபாய், 

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையரில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். முதல் செட்டில் ஆரம்பத்தில் தடுமாறிய (3-7) சிந்து அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு, இடக்கை புயல் கரோலினாவை மிரள வைத்தார். முதல் செட்டை போராடி வசப்படுத்திய சிந்துவுக்கு, 2-வது செட்டில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. வலுமிகுந்த ஷாட்டுகள் மற்றும் சாதுர்யமாக பந்தை திருப்புவதில் கரோலினா தடுமாற, அது சிந்துவுக்கு சாதகமாக அமைந்தது. 46 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் இறுதியில் சிந்து 21-17, 21-13 என்ற செட் கணக்கில் கரோலினாவை துவம்சம் செய்தார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினாவிடம் அடைந்த தோல்விக்கும் சிந்து பழிதீர்த்துக் கொண்டார்.

3-வது லீக்கில் ஆடிய சிந்துவுக்கு இது 2-வது வெற்றியாகும். இதையடுத்து இந்த பிரிவில் 2-வது வீராங்கனையாக அரைஇறுதியை உறுதி செய்தார். இந்த பிரிவில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி கண்ட சீனாவின் சன் யு ஏற்கனவே அரைஇறுதியை எட்டி விட்டார். ஆச்சரியப்படும் விஷயமாக 3 லீக்கிலும் கரோலினா மரின் மண்ணை கவ்வியது குறிப்பிடத்தக்கது.

‘ஏ’ பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்தை பிடித்த தென்கொரியாவின் சங் ஜி ஹியூனுடன், சிந்து இன்று அரைஇறுதியில் பலப்பரீட்சை நடத்துகிறார். 

Next Story
  • chat