இந்தியாவின் ‘நாக் அவுட்’ மன்னன்!


இந்தியாவின் ‘நாக் அவுட்’ மன்னன்!
x
தினத்தந்தி 7 Jan 2017 8:25 AM GMT (Updated: 7 Jan 2017 8:25 AM GMT)

குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான விஜயேந்தர் சிங், ‘நாக் அவுட்’ குத்துகளால் எதிரிகளை வீழ்த்துவதில் திறமையானவர். இதுவரை நடந்த 8 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில், 7 போட்டியாளர்களை நாக் அவுட் முறையில் வீழ்த்தி

குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான விஜயேந்தர் சிங், ‘நாக் அவுட்’ குத்துகளால் எதிரிகளை வீழ்த்துவதில் திறமையானவர். இதுவரை நடந்த 8 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில், 7 போட்டியாளர்களை நாக் அவுட் முறையில் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியவர். தொடர்ந்து நாக் அவுட் குத்து களால் குத்துச்சண்டை உலகை கலக்கி வரும் விஜயேந்தரின் சிறு பேட்டி...

 நாக் அவுட் குத்துகளில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?

குருவை போல தானே சிஷ்யனும் இருப்பான். நான் முகமது அலியிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய வீடியோக்களை அதிகமாக பார்த்திருக்கிறேன். அவருடைய அசைவுகளில் ஒளிந்திருக்கும் நுணுக்கங்கள், எதிராளியை அடிக்க விட்டு... பின்னர் திருப்பி அடித்து நொறுக்கும் நுட்பம் என அவருடைய வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். அதுவே நாக் அவுட் குத்துகளை வலிமையாக்கி உள்ளது.

  தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் குதித்ததற்கான காரணம் என்ன?

முகமது அலி, மைக் டைசன், பிளைட், மே வெதர்... போன்ற குத்துச்சண்டை வீரர்களை தொழில்முறை போட்டிகள் பிரபலப்படுத்தியது. இந்தியாவில் திறமையான குத்துச்சண்டை வீரர்கள் இருந்தாலும், அவர்களை உலகளவில் பிரபலப்படுத்த ஒரு மேடை தேவைப்படுகிறது. அதற்காகவே தொழில்முறை போட்டிகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். உலகளவில் இந்தியாவின் புகழை நிலைநாட்டுவதே என்னுடைய நோக்கம்.

  நீங்கள் தொழில்முறை போட்டிகளில் களமிறங்கியதும் ஏராளமான சர்ச்சைகள் வெடித்தன. அதை எப்படி சமாளித்தீர்கள்?

நியூட்டனின் மூன்றாம் விதியை போலவே, ஒரு செயலுக்கு வரவேற்பு கிடைப்பதை போன்றே எதிர்ப்பும் கிளம்பத்தான் செய்யும். அதை பொருட்படுத்தினால் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும். வாழ நினைப்பதை வாழ்ந்து காட்டவேண்டும்.

உங்கள் மனைவியின் கருத்து என்ன?

அவருக்கு குத்துச்சண்டை போட்டிகளே பிடிக்காது. ஏனெனில் போட்டி என்றதுமே அவர் படபடப்பாகி விடுவார். நடந்து முடிந்த போட்டியை கூட டி.வி.யில் பார்க்கமாட்டார்.

 தோனி, சச்சின், தங்கல் திரைப்படங்களை தொடர்ந்து உங்களது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகுமா?


அதற்கு இன்னும் அதிகமாக சாதிக்கவேண்டும். அதுவரை என்னை பற்றிய புத்தகங்களை கூட எதிர்பார்க்கவில்லை.

 சொந்த ஊரான அரியானாவில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகிறதா?

நான் குத்துச்சண்டை பயிற்சி பெற்ற ஆரம்ப காலக்கட்டத்தை ஒப்பிடும்போது தற்போது அரியானா ரொம்பவே முன்னேறிவிட்டது. மாதத்திற்கு ஒருமுறை குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு செய்கிறார்கள். அங்கு துடிப்பான வீரர்களை பார்க்கமுடிகிறது.

 உங்களுக்கு பிடித்த விளையாட்டு?

பிடித்த விளையாட்டும், பிடிக்காத விளையாட்டும் ஒன்றே ஒன்று தான். அது கிரிக்கெட். புதுப்புது இளம் வீரர்களை கிரிக்கெட் அறிமுகப்படுத்துவதால் பிடிக்கிறது. அதேசமயத்தில் ஒட்டுமொத்த விளையாட்டுகளையும் கீழே தள்ளிவிட்டு புகழ் உச்சியில் நிலைபெற்றிருப்பதால் கிரிக்கெட் பிடிக்காத விளையாட்டாகவும் இருக்கிறது.

 ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியது பற்றி?

இயற்கை உணவுகளை தவிர மற்ற அனைத்துமே ஊக்கமருந்தாக தான் பார்க்கப்படுகிறது.

Next Story