ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய ஆண்கள் அணி ‘சாம்பியன்’


ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய ஆண்கள் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 5 Feb 2017 8:02 PM GMT (Updated: 2017-02-06T01:32:12+05:30)

ஆசிய ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டி ஹாங்காங்கில் நடந்தது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது.

ஹாங்காங்,

ஆசிய ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் போட்டி ஹாங்காங்கில் நடந்தது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. ஒரு ஆட்டத்தில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த 18 வயதான வேலவன் செந்தில்குமார் 12-10, 11-0, 11-2 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் சாய் ஹங்கை பந்தாடினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 10-12, 7-11, 11-5, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் போராடி டேரன் ராகுலை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த பட்டத்தை இந்திய அணி வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2011-ம் ஆண்டில் பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியிருந்தது. சாதித்த இளம் வீரர்களை தேசிய பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா வெகுவாக பாராட்டினார்.

முன்னதாக பெண்கள் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சீனத்தைபேயை வீழ்த்தி 6-வது இடத்தை பிடித்தது. ஐஸ்வர்யா, வேதிகா, சன்யா ஆகிய வீராங்கனைகள் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

Next Story