தென் மண்டல விளையாட்டு தமிழக வீராங்கனை காயத்ரி 2 தங்கம் வென்றார்

சென்னையில் நேற்று தொடங்கிய மத்திய வருவாய் துறையினருக்கான தென் மண்டல விளையாட்டு போட்டிகளில் வருமான வரித்துறை அணியை சேர்ந்த
சென்னை,
தமிழக வீராங்கனை காயத்ரி 100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய இரண்டு பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றார்.
தென் மண்டல விளையாட்டுசென்னை சுங்க இலாகா சார்பில், மத்திய வருவாய் துறையினருக்கான 49–வது மத்திய தென் மண்டல விளையாட்டு போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, நீச்சல் உள்பட 16 போட்டிகளில் சுமார் 900 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேரு ஸ்டேடியத்தில் நேற்று காலை நடந்த தொடக்க விழாவில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய (ஓ.டி.ஏ.) கமாண்டன்ட் பாபி மேத்யூஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். ஒலிம்பியன், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன், முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனிவில்சன் கவுரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சென்னை சுங்க இலாகா தலைமை கமிஷனர் பிரணாப் குமார் தாஸ் தலைமை தாங்கினார். சுங்க இலாகா கமிஷனர்கள் மயங்குமார், டாக்டர் சந்தோஷ்குமார், பி.கே.பெகரா, இணை கமிஷனர் தமிழ்வேந்தன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் ஒலிம்பியன்கள் மற்றும் சர்வதேச வீரர், வீராங்கனைகளான பாபி அலோஷியஸ், அங்கித் சர்மா, கனகராஜ், டாக்டர் ஆர்.நடராஜன், ராமச்சந்திரன், ஜி.காய்த்ரி, கே.எம்.பினு, தனலட்சுமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
காயத்ரிக்கு 2 தங்கம்முதல்நாளான நேற்று நடந்த தடகள ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஆர்.சுவாமிநாதன் (சுங்க இலாகா, தமிழ்நாடு), 110 மீட்டர் தடை ஓட்டத்தில் பாலமுருகன் (வருமான வரித்துறை, தமிழ்நாடு), நீளம் தாண்டுதலில் அங்கித் சர்மா (வருமான வரித்துறை, தமிழ்நாடு) ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
பெண்களுக்கான 110 மீட்டம் தடை ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் வருமான வரித்துறை (தமிழ்நாடு) அணியைச் சேர்ந்த ஜி.காயத்ரி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 100 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.அர்ச்சனா (சுங்க இலாகா, தமிழ்நாடு), உயரம் தாண்டுதலில் லிபியா ஷாஜி (கலால் வரி, கேரளா), குண்டு எறிதலில் அனிதா தேவி (கலால் வரி, தெலுங்கானா) ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
இன்று 2–வது நாள் போட்டிகளும், மாலையில் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.