மத்திய வருவாய் துறையினருக்கான தென் மண்டல விளையாட்டு; தமிழக அணி ‘சாம்பியன்’


மத்திய வருவாய் துறையினருக்கான தென் மண்டல விளையாட்டு; தமிழக அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 7 Feb 2017 9:57 PM GMT (Updated: 7 Feb 2017 9:57 PM GMT)

சென்னையில் நடந்த மத்திய வருவாய் துறையினருக்கான தென் மண்டல விளையாட்டு போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

தென் மண்டல விளையாட்டு

மத்திய வருவாய் துறையினருக்கான 49–வது தென்மண்டல விளையாட்டு போட்டிகள் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றன. இதில் நடத்தப்பட்ட தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி, நீச்சல் உள்பட 16 வகையான போட்டிகள் நேற்று நிறைவடைந்தது.

தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஆர்.சுவாமிநாதன்(சுங்க இலாகா, தமிழ்நாடு), 400 மீட்டர் ஓட்டத்தில் ஜெயப்பிரகாஷ் ஷெட்டி (வருமான வரி, கர்நாடகா), 800 மீட்டர் ஓட்டத்தில் நீரஜ் (கலால் வரி, கேரளா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் சதிந்தர் சிங் (வருமான வரி, கர்நாடகா), 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஆர்.பி.ஸ்ரீதர் (வருமான வரி, ஆந்திரா), 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.கிருஷ்ணையா (வருமான வரி, ஆந்திரா) ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.

சலாலுதீனுக்கு தங்கம்

எஸ்.என்.முகமது சலாலுதீன் (கலால் வரி, தமிழ்நாடு) டிரிபிள் ஜம்ப் பந்தயத்திலும், என்.சங்கர் (கலால் வரி, தமிழ்நாடு) சங்கிலி குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலிலும் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்கள்.

பெண்கள் பிரிவில் 400 மற்றும் 800 மீட்டர் ஓட்டங்களில் ஜி.கே.விஜயகுமாரி (வருமான வரி, தமிழ்நாடு) இரட்டை பட்டம் பெற்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.அர்ச்சனா (சுங்க இலாகா தமிழ்நாடு), ஈட்டி எறிதலில் புஷ்பா ஹேமசந்த் (வருமான வரி, தமிழ்நாடு) ஆகியோர் தங்கம் வென்றனர். தனிநபர் சாம்பியன்களாக முகமது சலாலுதீன், விஜயகுமாரி (இருவரும் தடகளம்), என்.அரவிந்த் (கலால் வரி, தமிழ்நாடு,) எஸ்.ஆர்த்தி (கலால் வரி, கர்நாடகா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அணி சாம்பியன்

கால்பந்து போட்டியில் சென்னை சுங்க இலாகா அணியும், கபடி போட்டியில் வருமான வரி (தமிழ்நாடு) அணியும், கைப்பந்து போட்டியில் வருமான வரி (தமிழ்நாடு) அணியும், கூடைப்பந்தில் வருமான வரி (தமிழ்நாடு) அணியும், ஆக்கியில் கலால்வரி (கர்நாடகா) அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. சுங்க இலாகா, கலால் வரி, வருமான வரி ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழக அணி மொத்தம் 292 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஆந்திர அணி 157 புள்ளிகளுடன் 2–வது இடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் வருமான வரித்துறை தலைமை கமி‌ஷனர் ஏ.கே.ஸ்ரீவத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார். கலால் மற்றும் சர்வீஸ் வரியின் சென்னை மண்டல தலைமை கமி‌ஷனர் சி.பி.ராவ், சுங்க இலாகா தலைமை கமி‌ஷனர் பிரணாப் குமார் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story