துளிகள்

* லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த காலதாமதம் செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியது.
அனுராக் தாகூர் மன்னிப்பு கேட்டார்
அத்துடன் தலைவர் அனுராக் தாகூர் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்ததற்காக ஏன்? கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனுராக் தாகூர் நேரில் ஆஜராகி தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அத்துடன் வேண்டுமென்றே தவறான தகவலை அளிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 17–ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அனுராக்தாகூர் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகுவதற்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.
சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் மெட்டராசி விலகல்* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளராக உலக கோப்பையை வென்ற இத்தாலி அணியில் இடம் பிடித்து இருந்த மெட்டராசி கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தார். அவரது பயிற்சியில் சென்னை அணி 2015–ம் ஆண்டில் கோப்பையை வென்று அசத்தியது. ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் வெற்றிகரமான பயிற்சியாளராக விளங்கிய மெட்டராசி, சென்னை அணி நிர்வாகத்தினரின் ஒப்புதலுடன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.
லீக் கால்பந்து: வருமான வரி அணி வெற்றி* சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 2–1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வீழ்த்தியது.
அகில இந்திய கைப்பந்து போட்டியில் இன்று மோதும் அணிகள்* நெல்லை பிரண்ட்ஸ் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் நினைவு 44–வது அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் முதல் நாளில் ஆண்கள் பிரிவில் நடைபெறும் ஆட்டங்களில் ஐ.ஓ.பி.–செயின்ட் ஜோசப்ஸ், ஓ.என்.ஜி.சி.–எஸ்.டி.ஏ.டி, கர்நாடகா–ஐ.சி.எப்., மேற்கு ரெயில்வே–சுங்க இலாகா அணிகளும், பெண்கள் பிரிவில் நடைபெறும் ஆட்டங்களில் கேரளா போலீஸ்–மேற்கு ரெயில்வே, தெற்கு ரெயில்வே–சாய் (தலச்சேரி) அணிகளும் மோதுகின்றன.